திருஷ்டி பொட்டு! -விருதுநகர் இயற்கை தயாரிப்பு!

விருதுநகரில் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் திருஷ்டி பொட்டு: வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது

 பச்சரிசி உட்பட இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் விருதுநகர் சிரட்டை திருஷ்டிப் பொட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.குழந்தைகளுக்கும், கர்ப்பிணி களுக்கும் மட்டுமின்றி மணப்பெண் களுக்கும் மற்றவர் கண்பட்டு விடக் கூடாது என்பதற்காக கண்ணங் களில் திருஷ்டி பொட்டு வைப்பது வழக்கம். கடைகளில் விற்பனை செய்யப்படும் கருப்பு மை பொட்டு களை வாங்கி வைப்பதால் சிலருக்கு அரிப்பு, தோல் நிறம் மாறுதல், புண் போன்றவையும் ஏற்படக்கூடும். ஆனால், விருதுநகர் அருகே உள்ள குள்ளூர்சந்தையில் பச்சரிசி உட்பட இயற்கையான பொருட் களைக் கொண்டு கருப்பு திருஷ்டி பொட்டுகள் தயாரித்து தேங்காய் சிரட்டையில் வைக்கப்படுகிறது. இதனால் இந்த கருப்பு திருஷ்டிப் பொட்டு பயன்படுத்தும்போது ஒவ்வாமை ஏற்படுவதில்லை. எனவே உள்ளூர் மட்டுமின்றி மதுரை, தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, கோவை, சென்னை, ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களிலும் விருதுநகர் சிரட்டை திருஷ்டி பொட்டுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சிரட்டை திருஷ்டிப் பொட்டுகளை சிலர் மொத்தமாக வாங்கி விற்பனைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.


இந்த திருஷ்டி மையில் எந்த ரசாயனமும் கலக்கப்படுவதில்லை. பச்சரிசியை நன்கு வறுத்து கருகச் செய்து, அத்துடன் கருவேலங்காய், வேங்கை மரத்து பிசின் ஆகிய வற்றையும் சேர்த்து நீர் கலந்து கொதிக்க வைத்து இந்த மை தயாரிக்கப்படுகிறது. நிழலில் 4 நாட்கள் காயவைத்த பின்னர் இதை விற்பனைக்கு அனுப்புகிறார்கள். பச்சரிசியில் தயாரிப்பதால் சரு மத்துக்கு ஒவ்வாமை, பக்க விளைவு ஏற்படாது. லேசாக தண்ணீர் வைத்து எளிதாக பொட்டை அழிக்கவும் முடியும். இந்த மையை சிரட்டையில் வைப்பதால், அதன் தன்மை மாறாமலும், வேதிமாற்றம் ஆகாமலும் நீண்டநாள் பாதுகாக்க முடியும். இதற்காக கிராமங்களுக்குச் சென்று பெட்டிக் கடைகளில் தேங்காய் சிரட்டைகளை வாங்கி வந்து ஒரே அளவில் அதை வெட்டி யெடுத்து, நார்களை அகற்றி வழு வழுப்பாக்கி பயன்படுத்துகிறார்கள். அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் இந்த மை பொட்டு கிடைக்கும்.  சில கடைக்காரர்கள் சிரட்டை மை பொட்டுக்களை மொத்தமாக வாங்கி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதும் உண்டு.