விருதுநகர்க்கு அருகில் இருக்கும் சில ஊர்கள் பற்றிய விவரங்கள.


விருது நகர் :

விருதுநகரின் பழையப் பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. தெப்பக்குளத்தைச் சுற்றிலும் கடைத்தெரு உள்ளது. தேங்காய் எண்ணெய்யும், காப்பித் தூளில் கலக்கப்படும் சிக்கரியும் அதிக அளவில் விற்பனையாகின்றன. ஏலக்காய் முக்கியச் சந்தைப் பொருளாக விளங்குகிறது. ஏலக்காயிலிருந்து பருப்பை எடுத்தபின் எஞ்சும் தோலை வெளி நாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

உயர்ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. பல பருத்தி அரைக்கும் ஆலைகள், எண்ணெய் ஆலைகள், உயர்நிலைப்பள்ளிகள், தொழிற்கல்லூரி, சுருட்டு மற்றும் சோப்பு தயாரிக்கும் நிறுவனங்கள்,பருப்பு உடைக்கும் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், நெசவா லைகள், மருத்துவமனைகள் முதலியன அமைந்துள்ளன. இங்கிருந்து இரயில் மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள இரயில் நிலையத்தில் மிக நீளமான பிளாட்பாரமும், சரக்கு ஏற்ற வசதியாக மார்ஷல் யார்டும் அமைக்கப்பட்டுள்ளன. சூலக்கரை பகுதியில் அரசு தொழிற்பேட்டையும், அதனருகில் தொழிற்பயிற்சிப் பள்ளியும் இயங்குகின்றன.

சிவகாசி :

சிவகாசி நகரம் தொழிற்துறையில் மிகவும் முன்னேற்றம் கண்டுள்ளதால் இவ்வூரை "குட்டி ஜப்பான்" என்று அழைக்கின்றனர். பட்டாசு உற்பத்தியால் இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் சிவகாசி புகழ்பெற்று விளங்குகிறது. மேலும் தீக்குச்சித் தயாரித்தல் இங்கு பெரும்பான்மையாக நடைபெறுகிறது. பெண்களும் சிறுவர் சிறுமியரும் ஏராளமாக தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரிகிறார்கள். சிவகாசி அச்சுத் தொழிலுக்கும் பெயர் பெற்றதாகும். நூற்றுக்கணக்கில் லித்தோ அச்சகங்கள் நடைபெறு கின்றன. ஆப்செட் அச்சகங்களும் ஏராளமாக உள்ளன. அச்சுத் தொழிலுக்குத் தேவையான அனைத்து காகித வகைகள் வியாபாரமும், அச்சுமை, அச்சுக்கருவிகளின் பகுதிகள் ஆகியவற்றின் மொத்த வியாபாரமும் இந்நகரில் பெருகியுள்ளது. ஆண்டு தோறும் காலண்டர் அச்சடிப்பது தமிழ்நாட்டிலேயே இங்குதான் பெருமளவில் நடை பெறுகிறது. தமிழ்நாட்டில் அச்சுத் தொழிலின் பெரும்பான்மைத் தேவையை இந்நகரமே நிறைவு செய்கிறது. மேலும் இங்கு தகரப் புட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. மாட்டுத்தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உள்ளன. இந்நகரம் அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் கி.பி.1420-1460 ஆண்டில் உருவாக்கப்படதாகக் கருதப்படுகிறது.

சாத்தூர் :

இதன் பழைய பெயர் சாத்தனுர் ஆகும். காட்டின் இடையே அமைந்துள்ள சாத்தனுர் கோவிலைச் சுற்றி உருவான நகரம் என்பதால் சாத்தூர் என்று பெயர் உண்டாயிற்று. மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் சாத்தூரின் தெற்கெல்லையில் ஒரு பாலத்தையும், விநாயகர் கோவிலையும், ஒரு சத்திரத்தையும் கட்டினாள். பருத்தி அரைக்கும் ஆலைகள், தீப்பெட்டித் தொழிற்சாலைகள், நிப்பு தொழிற்சாலைகள் முதலியன வெள்ளையர் ஆட்சி காலத்திலிருந்தே இங்கு இயங்கி வருகின்றன. தீப்பெட்டித் தொழிலுக்குத் தேவைப்படும் சில இரசாயனப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும், மற்றும் பல வியாபார நிறுவனங்களும் அமைந்துள்ளன. வெள்ளரிப் பிஞ்சுக்கும், சீனி மிட்டாய், கடலை மாவுச் சேவு இவற்றிற்கும் சாத்தூர் பெயர் பெற்ற ஊராகும்.

அருப்புக் கோட்டை :

விருதுநகர்-மானாமதுரை சந்திப்புக்களுக்கிடையில் உள்ள முக்கியமான ரயில் நிலையம் அருப்புக்கோட்டை ஆகும். மதுரை, எட்டயபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருச்சுழி போன்ற பெரிய நகரங்கள் அருப்புக்கோட்டையிலிருந்து சிறிது தொலைவில் உள்ளன. இங்கு மணிலாக்கடலை, கருப்பட்டி, நல்லெண்ணெய் முதலியவற்றின் விற்பனை மொத்த வியாபாரமாக நடைபெறுகிறது. இங்கு நெசவுத் தொழிலும் சிறப்புற்றுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சேலைகள், வேட்டிகள் இந்தியாவில் பல இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

ஆத்துப்பட்டி :

திருச்சுழி-அருப்புக்கோட்டைச் சாலையில் இவ்வூர் உள்ளது. இங்கு ஒரு நூலாலை இருக்கிறது. பருத்தி, வேர்க்கடலை முக்கிய பயிர்கள்.

பந்தல்குடி :

அருப்புக் கோட்டையிலிருந்து 13 கி.மீ தொலைவில் எட்டயபுரம் சாலையில் இவ்வூர் உள்ளது. இங்கு பருத்தி அரைக்கும் ஆலைகள் உள்ளன. துவரை, உளுந்து, பருத்தி ஆகியன முக்கிய பயிர்கள்.

ஆமணக்கநத்தம் :

அவுரிச்செடி இங்கு நிறைய விளைகிறது. இச்செடி தூத்துக்குடிக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கிருந்து பல இடங்களுக்கும் ஏற்றுமதியாகிறது.

குல்லூர்ச் சந்தை :

இவ்வூர் விருதுநகருக்கு அருகிலிருப்பதால் வாணிகத்தில் சிறப்புற்றுத் திகழ்கிறது. தறி நெசவுத் தொழில் செய்யும் தேவாங்கர் அதிகமாக வாழும் ஊராகும். இங்கு உற்பத்தியாகும் துணிகள் பல இடங்களுக்கும் ஏற்றுமதியாகின்றன.

கஞ்சநாயக்கன்பட்டி :

அருப்புக்கோட்டை அருகே இவ்வூர் அமைந்துள்ளது. இது பல வகை தானிய வேளாண்மையில் சிறந்து விளங்குகிறது. கழிவுத்தாள், வைக்கோல் முதலியவற்றைக் கொண்டு அட்டை செய்யும் தொழில் இங்கு நடைபெறுகிறது.

பாளையப்பட்டி :

அருப்புக்கோட்டை இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள இவ்வூர் குறுநில மன்னர்களால் ஆளப்பெற்றது. மிளகாய், சீனிக்கிழங்கு, நெசவு முதலியவற்றுக்குப் பெயர் பெற்ற ஊர். இவ்வூரில் பல மல்லிகைப் பூந்தோட்டங்கள் செழிப்பாக உள்ளன. இங்கிருந்து பல ஊர்களுக்கும் மல்லிகைப்பூ அனுப்பப்படுகிறது.

அழகிய நல்லூர் :

காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு மேற்குக் கோடியில் அமைந்துள்ள இவ்வூரின் பண்டைய பெயர் குட்டலோட்டி என்பதாகும். நெல், மிளகாய், பருத்தி ஆகியன இங்கு மிகுதியாகப் பயிரிடப்படுகின்றன. இவ்வூரில் நிறைய மயில்களும் காணப்படுகின்றன.

ஜோகில் பட்டி :

விஜயநகரப் பகுதியிலிருந்து குடியேறிய ரெட்டியார் சமூக மக்கள் இவ்வூரில் அதிகமாக வாழ்கின்றனர். கல்குறிச்சியிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள இவ்வூரில் பாறை, கல் உடைக்கும் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.

கல்குறிச்சி :

மதுரை, விருதுநகர் ஆகிய பெரிய நகரங்கள் இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ளன. நெசவாளர் குடும்பங்கள் மிகுந்துள்ளதால் நெசவுத்தொழில் இங்கு சிறப்பாக நடை பெறுகிறது.

மல்லாங்கிணறு :

இவ்வூர் நாடக்கக் கலை வளர்ச்சிக்கு முக்கிய இடமாக விளங்கி வருகிறது. இதற்கருகில் உள்ள சூரம்பட்டியில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வரலொட்டி :

விருது நகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. இங்குள்ள சிவன் கோவில் புதைந்து காணப்படுகிறது. அதனருகில் 15 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்ட ஐந்து கிணறுகள் உள்ளன. இவற்றைப் பாண்டியன் கிணறு என்பர். கிணற்றின் சுற்று மதிலில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வூர் வழியே பாலவநத்தத்துக்குச் செல்லும் சாலை ராணிமங்கம்மாளால் அமைக்கப்பட்தாகச் சொல்லப்படுகிறது.

திருச்சுழியல் :

அரசு அலுவலகங்கள் பல உள்ள இவ்வூரைச் சுற்றிலும் மதுரை, விருதுநகர், அருப்புக் கோட்டை நகரங்கள் அமைந்துள்ன. தேவாரம் பாடப்பெற்ற தலமாகும். இக்கிராமம் குண்டாற்றின் கரையில் அமைந்து செழிப்பாக உள்ளது. ரமண மகரிஷி இவ்வூரில் பிறந்தவராவர். வணிகத் துறையில் நாடார்கள் சிறப்புற்று விளங்குகின்றனர். இங்குள்ள மண்வளப் பாதுகாப்பு அலுவலகம் வேளாண்மை வளர்ச்சிக்குரிய உதவிகளை ஆற்றி வருகிறது. இங்குள்ள தென்னிந்திய திருச்சபையின் தேவாலயம் கிறித்துவர்களின் சிறந்த வழிபாட்டுத் தலமாக உள்ளது.

குலசேகர நல்லூர் :

குலசேகரப் பாண்டியன் பெயரால் ஏற்பட்ட இவ்வூரில், அவனால் கட்டப்பட்ட பிள்ளையார் கோவிலும், கல்வெட்டுகளும் உள்ளன.

பண்ணை மூன்றடைப்பு :

வேளாண்மைச் செழிப்புற நடைபெறும் இவ்வூரில் பல மன்னர்களின் பண்ணைகள் அமைந்துள்ளன. வாழை, கரும்பு, வெற்றிலைக் கொடிக்கால் விளைச்சல் அதிகமாக நடைபெறுகிறது.

பள்ளிமடம் :

திருச்சுழிக்கு எதிரே, குண்டாற்றின் மறுகரையில் இவ்வூர் அமைந்துள்ளது. காட்டுக் காளையர் கோவில் என்பது இவ்வூரின் இன்னொரு பெயர். சமணர் பள்ளி ஒன்று இங்கு இருந்திருக்கிறது. ஆற்றங்கரையில் காளைநாதர், சொர்ணவல்லி அம்மன் கோவில்கள் உள்ளன. கோட்டை ஒன்று இருந்ததிற்கான தடயங்களும் காணப்படுகின்றன.

நரிக்குடி :

நரிக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைநகரான இவ்வூரில் மருதுபாண்டியரால் கட்டப்பட்ட மருதுவிநாயகர் கோவிலும், மீனாம்பிகைக் கோவிலும், சத்திரமும் உள்ளன. மருது பாண்டியர்க்கு இவ்வூரில் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் விழா எடுத்துச் சிறப்பிக்கப்படுகிறது. சத்திரத்திற்குள் தேவதைக்கு முறைப்படி பூசைகள் நடைபெறுகின்றன. சின்னச்சாமி முத்தழகு என்னும் மருதுபாண்டியர் அமைச்சர்களின் உருவச் சிலைகளும் இச்சத்திரத்தில் இருக்கின்றன.

மானுர் :

இவ்வூரில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரத்தன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெறுகிறது.

வீரசோழம் :

நரிக்குடியிலிருந்து 5 கி.மீ சுற்றியுள்ள காடுகளில் மயில்கள் அதிகம் காணப்படுகின்றன. இவ்வூரிலுள்ள பள்ளிவாசலில் மயில்களுக்குத் தீனி போடுவார். பல ஊர்களுக்கும் இங்கிருந்து மயில்கள் அனுப்பப்படுகின்றன.

பிள்ளையார் தொட்டியங்குளம் :

பிள்ளையாருக்கு வேண்டிக்கொண்டு அவர் உருவத்தைப் பூமியில் புதைத்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வர். இதனால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. மேலும் இவ்வூர் திருவிடை நல்லூர் எனவும் திருவளர் நல்லூர் எனவும் வழங்கப்படுகிறது.

தளவாய்புரம் :

17ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட இவ்வூர் தளவாய் அரியநாத முதலியார் பெயரால் நிலவுகிறது. சேற்றுரிலிருந்து தென்கிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூரில் நெசவுத் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.

அய்யனார் கோவில் :

இராஜப்பாளையத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. சாலை வசதி பெற்றுள்ளது. இங்கு நரகத்து அய்யனார் கோவிலும், சிறிய அருவியும் உள்ளன. அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்கிறது. பருவகாலத்தில் கூடுதலாக தண்ணீர் விழுகிறது. இதிலிருந்து குழாய் மூலமாக இராஜப்பாளையம் நகருக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு களிப்பூட்டும் இடமாகும்.

புனல்வேலி :

பொட்டல்பட்டிக்கு அருகில் அமைந்துள்ள இச்சிற்றுர் நெசவுத் தொழிலால் சிறப்புற்று விளங்குகிறது.

வற்றிராயிருப்பு :

இயற்கை எழில் சூழலில் இவ்வூர் அமைந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியான டாக்டர். கே.எஸ். கிருஷ்ணன் இவ்வூரினர் ஆவார். இவ்வூரில் சிவன் கோவில், நல்லதங்காள் கோவில் முதலியன உள்ளன. நல்லத் தங்காள் கோவில் விழா மதுரைத் தையற்காரர்களால் கொண்டாடப் பெறுகிறது.

அத்தியூத்து :

காட்டுவளம், இயற்கை எழில், நீர்வளம் கொண்ட இவ்வூர் வற்றாயிருப்பிலிருந்து 3கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு முகமதிய துறவி ஒருவரின் தர்கா உள்ளது. அதனருகில் ஏழு மரங்கள் உள்ளன. இவை பட்டுப் போவதே இல்லை.

குருவிப்பாறை :

மலை மீது அமைந்துள் இவ்வூரில் பளிஞர் என்ற மலைச் சாதியினர் மிகுதியா வாழ்கின்றனர். இப்பகுதியில் யானை நடமாட்டம் அதிகம். நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு பாறைப் பகுதியின் கீழ் சுமார் 150 பேர் தங்குவதற்குரிய இடவசதி உள்ளது. இப்பாறைக்கு சற்று அருகில் உள்ள சிறிய அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது.

கூமாப்பட்டி :

முஸ்லீம்கள் மிகுதியாக வாழும் இவ்வூரில் பெரிய கண்மாய் ஒன்றுள்ளது. மலைவடி வாரத்திற்கு நெருக்கமாக உள்ளதால் நீர்வளம் செழிப்பாக உள்ளது. மலைமீது காப்பியும் ஏலக்காயும் பயிரிடப் படுகின்றன. இவ்வூரருகே உள்ள பேச்சிக்கேணி பக்கம் யானைகளும், புலிகளும் காணப்படுகின்றன.

மூவரை வென்றான் :

இங்கு வாழைத் தோட்டங்கள் அதிகமாக உள்ளன. இவ்வூர் அய்யனார் வற்றாயிருப்பு வாழ் மக்களின் கண்கண்ட தெய்வமாகப் போற்றப் படுகிறது. இவ்வூர் அரசர் மூவரை வென்ற ஒருவனால் சிறப்புறுகிறது என்பர். மூவறையன் என்ற சிற்றரசனை வற்றா யிருப்பு மக்கள் சூழ்ச்சியால் வென்றனர் என்றும் வரலாறு கூறுகிறது. இவ்வூருக்கு சற்றுத் தள்ளி உள்ள 400 அடி உயர மலையை மொட்டை மலை என்பர். இம்மலையில் சுனையும் குகைக் கோவிலும் உள்ளன. நந்தியின் வாய் வழியாக நீர் கொட்டுகிறது.

சதுரகிரி :

மேற்கு தொடர்ச்சி மலைமீது அமைந்த பெயர் பெற்ற தலமாகும். சிதறிய கிரி என்பதே சதுரகிரி என வழங்கப்படுகிறது என்பர். வற்றாயிருப்பிலிருந்து 8கி.மீ தொலைவில் தாணிப்பாறை உள்ளது. அங்கிருந்து மலைமீது ஒற்றையடிப் பாதை வழியே சுமார் 10கி.மீ நடந்துச் சென்று சதுரகிரியை அடைய வேண்டும். வழியில் வழுக்குப் பாறை மிகுந்துள்ளதால் இப்பயணம் சற்று வருத்தும் திறத்தது. இம்மலையில் ஜோதிவிருட்சம் என்னும் ஒளிகாட்டும் மரம் உள்ளது. ஏராளமான மூலிகைகள் நிறைந்தது. பல குன்றுகளும் குளங்களும் காணப்படுகின்றன. சோலைகள் தோப்புகள் சூழ்ந்து இயற்கை எழில் நிறைந்து காணப்படுகின்றது. சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் இடமாக திகழ்கிறது.

சிறுமலை :

ஒரு சிறிய குன்றின் மீது இவ்வூர் உள்ளது. ஊரின் ஒரு பகுதி கிறிஸ்தியன் பேட்டை ஆகும். கத்தோலிக்கம் முதலில் பரவிய இடங்களுள் ஒன்றான இவ்வூரில் கிறிஸ்துவப் பெரியார் ஒருவரின் கல்லறை உள்ளது. இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆண்டுதோறும் மே மாதம் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.

மகாராஜபுரம் :

இந்திய விடுதலை வரலாற்றில் இவ்வூருக்கு சிறப்பான தனியிடம் உண்டு. சில காலம் இங்கு காந்தி ஆசிரமம் நடைபெற்றது. இங்கு கம்மவர்களால் கட்டப்பெற்ற எல்லையம்மன் கோவில் உள்ளது.

முதலியார் ஊற்று :

பொழுது போக்கவும், வேட்டையாடவும் வெள்ளையர் இவ்வூருக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். மலைப்பகுதியில் உள்ள இவ்வூர் அழகர் கோவிலிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரிலிருந்து சின்னமனுர், தேனி முதலியவற்றின் எழில் மிகுத் தோற்றத்தைக் கண்டு இன்புறலாம்.

ஆலங்குளம் :

கீழராஜகுலராமனிலிருந்து இவ்வூர் 6 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரைச் சுற்றியுள்ள கரிசல் பூமியில் பருத்தி சிறப்பாக விளைகிறது. சுண்ணாம்புப் படிவங்கள் மிகுந்த பகுதியாதலால், அரசினரின் சிமெண்டு தொழிற்சாலை நிறுவப்பட்டிருக்கிறது.

இராமச்சந்திரபுரம் :

சென்னங்குளம் இதன் மற்றொரு பெயர். இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கு பெற்ற ஊர். உகாண்டா பருத்தி இங்கு அதிகமாய் விளையும் வேளாண் பயிராகும்.

மல்லி :

ஆண்டாள் பிறந்த ஊராகும். இதற்கு 'மல்லி நாடாண்ட மடமயில்' 'மருவாரும் திருமல்லி வளநாடு' எனும் சொற்றொடர்களும் சான்றாகின்றன. விழுப்பனுர் என்னுமிடத்தில் பெருமாள்கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

மம்சாபுரம் :

சந்தாசாகிப் நினைவாக 'மகமது சாஹிப்புரம்' என்ற பெயரால் ஏற்பட்ட ஊர் மம்சாபுரம் என வழங்குகிறது. வில்லிப்புத்தூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.