சாத்தூர் கோவில்கள் :
சாத்தூரின் கிழக்கிலுள்ள சாத்தூரப்பன் கோவில், சிவகாமசுந்தரி -சிதம்பரேஸ்வரர் கோவில், வைப்பாற்றின் கரையில் நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்ட வெங்கடா சலபதி பெருமாள் கோவில் முதலியன சிறப்புமிக்க கோவில்களாகும்.
வேணுகோபால்சாமி கோவில் :
அருப்புக்கோட்டை வட்டத்தில் உள்ள பாளையப்பட்டியில் இக்கோவில் இருக்கிறது. வைகாசியில் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவின் போது இங்கு மாட்டுத் தாவணிச் சந்தை கூடுகிறது.
வரதராசப் பெருமாள் கோவில் :
புதுப்பட்டிக் கிராமத்தில் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் புகழ்பெற்ற வைணவக் கோவிலாகும்.
திருமேனிநாதர் ஆலயம் :
திருச்சுழியில் உள்ள இக்கோவில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. பிறகு சேதுபதிகளால் விரிவாக்கப்பட்டது. மருதுபாண்டியர் கட்டிய மண்டபங்களும் உள்ளன. நகரத்தார்களும் இதற்கு திருப்பணி செய்துள்ளன. இக்கோவில் நடராசர் திருவுருவம் பச்சிலை மூலிகைகளால் ஆனது. அம்மன் சந்நதியில் தாசி மண்டபம் உள்ளது. ஆடியில் தபசு, மார்கழியில் மணிவாசகர் விழா, பங்குனியில் உத்திரம் ஆகிய திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இன்னும் பிரளய விடங்கர், பழனிக் குமாரசாமி ஆகிய கோவில்களும் இவ்வூரில் உள்ளன.
நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் :
சேற்றுர் குறுநில மன்னர்களுக்கும் சொந்தமான இக்கோவில் தேவதானத்திற்கு மேற்கே 3 கி.மீ தொலைவில் தனித்துக் கட்டப் பட்டிருக்கிறது. பாண்டியனைக் கொல்ல சோழன் அனுப்பிய நச்சு கலந்த ஆடையின் மூலமாக நேரவிருந்த தீங்கை இவ்விறைவன் தவிர்த்தளியதால் இப்பெயர் ஏற்பட்டது என்பர். கோவிலருகே நாயக்கர் காலத்து மண்டமும், அரண்மனை மண்டமும் தேவர்கள் மண்டபமும், எதிரில் தெப்பக்குளமும் உள்ளன. வைகாசியில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
மகாலிங்கம் கோவில் :
இது சதுரகிரி மலையின் மேல் கட்டப்பட்டிருக்கிறது. இவ்விறைவனின் மதுரை வாழ் செளராஷ்டிரர்களின் குலதெய்வம் ஆகும். இக்கோவிலுக்கு 3 கி.மீ தூரத்தில் சந்தன மகாலிங்கம் குகைக்கோவில் உள்ளது. தாணிப் பாறையில் அஷ்டலட்சுமி ஆசிரமம் உள்ளது.
வேங்கடாசலபதி கோவில் :
திருவில்லிப்புத்தூர் வட்டத்துள் திருவண்ணாமலை என்னும் தலத்தில வேங்கடாசலபதி கோவில் உள்ளது. மலையடிவாரத்தில் கோனேரி எனும் அழகிய குளம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் கூட்டம் மிகுதியாகக் கூடுகிறது. இங்குள்ள விநாயகர் சிலை 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்டது. உலகிலேயே பெரிய விநாயகர் திருவுரு இதுவே.
நாச்சியார் கோவில் :
இக்கோவில் திருமலைநாயக்கரால் அழகிய சிற்பங்கள் அமையும் விதத்தில் திருப்பணி செய்யப்பட்டதாகும். திருப்பாவை முப்பதும் இக்கோவிலுக்குள் எழுதப்பட்டுள்ளன. 108 வைணவத் தலங்களில் உள்ள இறைவர்களின் பல்வேறு உருவங்களும் வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இக்கோவில் கி.பி.1850 வரை திருவிதாங்கூர் மகாராஜாவின் ஆட்சியிலிருந்து திருக்கொட்டாரம் எனப்படும் கோவில் நெற்களஞ்சியம் உள்ளது. இங்குள்ள வடபத்திரசனர் உருவம் திருவனந்தபுரம் அனந்த பத்பநாபர் உருவத்தை ஒத்திருக்கிறது. தளபதி கான்சாகிப் இக்கோவிலை கொள்ளையிட முயன்ற போது, விலையுயர்ந்த விக்கிரங்கங்களை கி.பி.1800-இல் திருவனந்தபுரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இங்குள்ள மாதவிப்பந்தல், கண்ணாடிக் கிணறு, திருப்பூர மண்டபம் ஆகியன காணத்தக்கவை. பங்குனி உத்திரத்தில ஆண்டாள் திருக்கல்யாணம் கொண்டாடப்படுகிறது. மார்கழியில் முப்பது நாளும் திருப்பாவை ஓதப்படுகிறது. புரட்டாசி கருடசேவையில் ஆண்டாளுக்குச் சூட்டிய மாலையை திருப்பதி ஏழு மலையானுக்கு அனுப்புவார்கள். திருப்பதியிலிருந்தும் ஆண்டாளுக்கு வரிசைகள் வருகின்றன. ஆடிப்பூரம் ஏழாம் திருநாளில் பெரியாழ் வாரைச் சிறப்பிக்கும் வண்ணம் நெல் அளக்கும் விழாவும் எண்ணெய் காப்பு விழாவும் நடைபெறும். வாரத்தில் ஒவ்வொரு வெள்ளியன்றும் ஆண்டாளும் ரங்க மன்னாரும் ஊஞ்சல் ஆடுவர்.
வைத்தியநாத சுவாமி கோவில் :
திரு வில்லிப்புத்தூரின் தென்பகுதி மடவார் விளாகம் எனப்படும். இங்கு ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றது. மடவார் விளாகத்தில சிவன் கோவில் இருக்கிறது. இக்கோவிலில் கிருஷ்ணதேவராயர் காலத்துச் சிற்பங்கள் காணப் படுகின்றன. திருமலைநாயக்கரால் இக்கோவில் திருப்பணி செய்யப்பெற்றது. திருமலை நாயக்கரின் மிகப்பெரிய உருவசிலை இக்கோவிலில் உள்ளது.